சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வேறு வேறு வேடமும்
வேற்று நாட்டுப் பாடமும்
சேறு கண்டு சென்றிடும்
செம்மை யற்ற மனிதனே
ஆறு தன்னை அடைந்துமே
அழுக்கு வாழ்வை அகற்றடா
மாறும் உலக நியதியில்
மாற்றம் வேண்டும் மாறடா!

கூறு மாகும் குடும்பமும்
குலத்தின் மானம் வீழுமே
ஏறு போன்ற நடையிதற்
கேற்ற வாழ்வைத் தேர்ந்தெடு
தாறு மாறு மாவதோ
தடுக்கி நீயும் வீழ்வதோ
தேறு மாறு கேட்கவே
தேடித் தேடி வருகிறேன்!

மாறு மாறு என்பதே
மாசில் லாமல் வாழவும்
நாறு மாறு வாழ்க்கையுள்
நாடி ஓடா தோங்கவும்
நூறு நூறாய் மாந்தரும்
நுழையு மிந்த அவலமும்
நீறு மாகும் வரையிலும்
நெருங்கி டாமல் தவிர்க்கவே!