வியாழன் கவிதை

jeyam

கவி 596

விடியலின் உன்னதம்

இருட்டுக்குள் கிடந்து தவிப்போர்க்கு
விடியலின் உன்னதம் தெரியும்
கருமேகங்கள் சூழ்ந்த நிலவினொளியை
விழிகள் எப்படி அறியும்
பறித்தே சுதந்திரத்தை அடிமைகளாக்கி
ஆளுது இன்னும் அதிகாரம்
திறக்கப்படா இருட்டறையினுள் தவிபோர்
விலங்கினையுடைக்க வருவாரோ யாரும்

சிறகுகளிலிருந்தும் பறக்க முடியாது
கூட்டுக்குள் அடைபட்டு முடக்கம்
இருக்கும்காலம் அது சுமையின் கோலம்
விடியாத இரவுகள் அடக்கம்
ஒதுக்கியேவைத்து இறுமாப்புடன் வாழும்
பூவுலக ஆணவ விஷங்கள்
செதுக்கியறிவை ஏற்படுத்தி புரிவை
வாழ்ந்திடின் உருவாகாதோ நிசங்கள்

காழ்ப்புணர்ச்சிகொண்ட மாந்தர்கள் வாழ்வு
இருள் அகன்று விடியட்டும்
ஆள்வது காலமும் அன்பாயிருந்து
அருள் உள்ளத்தில் படியட்டும்
ஒருமுறைதானேயிந்த ஆட்டம் அது
மனிதத்தைக் கருவாக்கி இருக்கட்டும்
வருகின்ற காலம் ஆண்டானடிமையில்லாத
ஒரு குவலயத்தை உருவாக்கட்டும்

ஜெயம்
02-03-2022