வியாழன் கவிதை

jeyam

கவி 589

படி படி

முன்னோர்கள் வாழ்ந்தாரே நல்லபடி
எந்நாளும் நலம்வாழ அவரைப்படி
அன்பாக வாழ்வதுதான் எப்படி
ஜென்மத்திற்குள் அந்தக்கலையைப் படி
அவரப்படி இவரிப்படியென குற்றஞ்சாட்டாதபடி
அவனியிலே வாழுவோம் அளந்த அளவின்படி

வாழ்க்கை, அதனை முதலில்படி
சூழ்ந்தாலும் துன்பம் விரும்பிப்படி
காலந்தருமென இருந்தால் தூங்கியபடி
நாளுள் கிடைப்பதெங்கே வரும்படி
இருந்ததுபோதும் மண்ணில் ஏங்கியபடி
விரைந்தெழுந்துகொள் உற்சாகத்தைத் தாங்கியபடி

சந்தேகப் பேயின் தாங்கொனா குளறுபடி
சந்தோசம் கெடுக்கும் மனதில் இருந்தபடி
பொறாமை சுரண்டும் அடுத்தவரைப் பார்க்கும்படி
வறுமையில் இருக்குமுன்னை கொடுமையாய் சோதித்தபடி
மயங்காமல் கிடைத்தது போதுமென நினைத்தபடி
தயங்காது வாழ்வினை இட்டுச்செல்லு அணைத்தபடி

சோகம்வந்து தாக்கிடினும் மனம் அடிபடாதபடி
போகும் நேரத்தை போகுமுன்பே எட்டிப்பிடி
கண்முன்னே உறவுகள் இருந்தாலும் தவிர்த்தபடி
எண்ணத்தை கட்டிப்போட்டு இருக்காதே உள்ளே தவித்தபடி
பாசமும் நேசமும் கருணையும் இருக்கட்டும் உயிரில் கலந்தபடி
தேசமே ஆண்டாலும் வாழ்ந்திடு பெற்றோரின் நிழலையும் மதித்தபடி

எட்டாத உயரத்தில் படைத்தவர் மறைந்தே இருந்தபடி
தட்டாது தருகின்றார் ,இருந்திடு மறவாது அவரை துதித்தபடி
வண்ணம் சொட்டும் இயற்கை அழகை ரசித்தபடி
சின்னச்சின்ன சந்தோசங்களுக்குள் நுழைந்து வசித்தபடி
இந்த ஒருத்தர வாழ்க்கைக்குள் அன்புக்குள் உருகிக்கரைந்தபடி
சிந்து உன் உழைப்பினை ,சொந்த வாழ்க்கை சொர்க்கம் ஆகும்படி

பழிவாங்கிக்கொள்ளும் பகை எண்ணங்கள் மறந்தபடி
துளிகூட பாவப்படாத தூய வாழ்வை வாழ்ந்தபடி
புதுவாழ்வொன்றை ,அகிலத்தில் வாழ்ந்திடுவாய் ஒழுங்கானபடி
அது இருக்கட்டும் வள்ளுவமும் வள்ளலாரும் சிறப்பாய் மொழிந்தபடி
மனம் அமைதிபெற்றுவிட வாழப்பார்’, மனம்விரும்பியபடி
சுகக் கவிதைகளாய் எழுதி எழுதி அதைத் தினமும்படி

ஜெயம்
11-01-2022