“
சந்தம் சிந்தும் சந்திப்பு 294. “மாசி”. மூசிப் பெய்யும்
மாசிப் பனியில்
முரல் மீன் வலையில்
திரளாய் தேறும்.
காசி அண்ணன்
மீன் கோன் ஓசை
காலை தோறும்
தெருவில் கூவும்.
கட்டிய பெட்டியுள்
கனக்கும் மீனுடன்
களைக்க களைக்க
சைக்கிளில் வருவார் பள்ளிக்கு கிளம்பும்
பரபரப்பிடையே
படலைக்கு விரையும்
துள்ளல் ஓட்டம்.
எண்ணித் தருவா
அம்மா காசை
எட்டுச் சதம்தான்
ஒரு மீன் காலம்.
சட்டிக்குள் எண்ணி
சட்டென போட்டு
ஜட்டி பைக்குள்
காசை இட்டு
எட்டி விழக்குவார்
எதிர் படலைக்கு.
மதியம் வருவோம்
மணக்கும் பொரியல்
சொதிக்குளும் துண்டு
சோறே இனிக்கும்.
தீயல் ,பொரியல்
ஆயன எல்லாம்
அம்மா கைப்பட
அருஞ்சுவை ஆகும்.
ஒட்ட சட்டியில்
உள்ளவை எல்லாம்
வட்டமாய் இருந்து
வயிராற உண்போம்.
எல்லாம் வழித்து
எமக்குத் தருவா
எதிரே இருந்து
புசிப்பதை ரசிப்பா.
சோறு வெறும் சொதி
மீதம் இருக்கும்.
எம் பசி தீர்த்து
எழுந்த திறுப்தியில்
உண்பது நிறைவு
என்றே என்றும்
எமக்காய் வாழ்ந்த
எங்கள் அம்மாவை
நினைத்தால் கண்ணில்
நீர் ஊற்றெடுக்கும்.
முரல் மீன் ருசியும்
முற்றுப் பெற்றது.
அம்மை அப்பனாய்
அப்பா இறந்தும்
எம்மை ஆள் ஆக்கிய
எங்களின் தெய்வம்.
கைமாறு எதுதான்
கடனைத் தீர்க்கும்.?
-எல்லாளன்-