சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு293
கவியழகு
சிந்தனைப் படகில்
சிலதூரப் பயணத்தில்
சிதறிய துளிகளுள்
சிக்கிய பொறிகள்

எதை நோக்கி
எங்கே போகின்றோம் ?
எண்ணத்தின் விசையுள்
எழுந்தாடும் உணர்வுகள்

விட்டதைப் பிடிக்கவோ
விரைவாகப் பயணம் ?
விழுந்தது தொலைந்ததால்
விளையாடும் விந்தையோ ?

முதிந்த கநியொன்றின்
மண்நோக்கிய பயணம்
மண்ணிற்கு வலியில்லை
மரத்துக்கு வலிக்குமோ ?

மயிர்க்கொட்டி தியானத்தின்
மகிமையாய் வண்ணத்திப்பூச்சி
மனதெல்லாம் கொட்டிடும்
மயிர்க்கொட்டியாய் எண்ணங்கள்

விடிந்திடும் போதங்கு
விழித்திடும் எண்ணங்கள்
விதைத்திடும் வரிகளாய்
விளைந்திடும் கவிதைகள்

உருள்கின்ற உலகமது
உருட்டிடும் காலங்கள்
உருவங்கள் மாறிடினும்
உறங்காமல் ஆன்மாவாய்

கணமொன்று சிந்தித்தால்
கனக்கின்ற உண்மைகள்
காற்றோடு கலந்திந்தக்
காலையில் கவிதையாய் . . . .

சக்தி சக்திதாசன்