இதயம்!
என்னை யியக்கும் மின்னிசையே
எழிலாய்த் தொடரும் தனியுறவே
பொன்னை விஞ்சும் பெருந்தனமே
பொதித்து நிற்பா யாயுளையே
சின்ன வுருவாம் சித்திரமே
சிந்தை யுன்றன் கைவசமே!
முன்னை யுதித்த முத்தெனவே
முழுதாய்த் தொடர்வாய் பத்திரமாய்!
விருப்பும் வெறுப்பும் சுமந்திருந்தே
வீழ்த லெழுதல் வகுக்கின்றாய்
அரும்பு மாசைக் கடலெனவே
ஆட்டி வைத்துச் சிரிக்கின்றாய்
கரும்பாம் காதல் கோட்டையெனக்
கனிந்த காட்சி யானவளே!
வருந்தாப் பாதை தந்துநின்றே
வனப்பைத் தருவா யென்றனுக்கே!
இல்லை மேன்மை யுனக்கிணையாய்
இதய மென்னும் பெட்டகமே!
எல்லை போடாப் பாதையதில்
ஏற்றம் தந்தே மகிழ்பவளே!
கல்லாய்த் தோன்றிப் பொழுதுகளில்
கருணை பொழிய மறுக்கின்றாய்
நல்லோ ராக வாழவிடு
நலமே வாழ்வைச். சமைத்துவிடு!
கீத்தா பரமானந்தன்