சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஈரம்!
மண்ணின் ஈரம் பசுமை நிறைக்கும்
மனத்தின் ஈரம் மகிழ்வை விதைக்கும்!
ஈரக் கசிவே இயக்குது உலகை
வேராய்த் தாங்கி வெறுமை போக்கும்!
இறைவன் அளித்த கொடையாய்
இசைந்து சுரக்கும் ஈரம்!
கறைகள் போக்கி நின்றே
கணமும் பசுமை விரிக்கும்!
சின்ன விதையின் ஈரம்
பாறையும் பிளக்கும் தீரம்!
மின்னல் போடும் வானம்
மிகுந்த மழையின் சாரம்!
ஈரம் கொண்ட இதயம்
இடும்மை போக்கும் சாரல்!
பூவின் ஈரம் தேனாய்ப்
பூமியின் ஈரம் நீராய்!
மேவித் தந்திடும் இன்பம்
மேதினி வாழ்வின் சொந்தம்!
கீத்தா பரமானந்தன்
09-12-24