சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 280
வெற்றிப்பயணம்
அன்பினிய தம்பி ,

வாழ்க்கை இருக்கிறதே !
அதன் வளைவுகளும் சுளிவுகளும்
உனக்குப் புரியாத புதிராக
விசித்திரங்களைத் தொடர்ந்து
விளைவித்துக் கொண்டிருக்கும்

வந்தது எல்லாம்
கசந்தது போலவும்
வருவது எல்லாம்
இனிப்பது போலும்
விந்தைமிகு உணர்வுகளை
உன்னுள் மீட்டி விடும்
வல்லமை படைத்தது நம்
வாழ்க்கை மறந்திடாதே !

சட்டியில் இருப்பதே
அகப்பையில் வரும் என்பர்
அறிவில் முதிர்ந்த பெரியோர்
சட்டியே இல்லையென்றால்
அகப்பையில் என்ன வரும் ?

இதுதானடா உண்மை வாழ்க்கை
உள்ளத்தில் உறுதியாய்
பதித்து விடு
இருக்கிறது என்போர்
சிலரே உலகில் தம்பி
இல்லையென்போர் தான் இங்கு
பலராய் காண்கின்றேன்

நினைத்தது நடப்பதும் உலகில்
நடப்பதை வெறுப்பதும் ஏனோ
மானிடநீதியாய் விளங்குது தம்பி 

தானாய் அனைத்தும்
மாறிடும் என்பது
கானாக் கனவாய்
மிதக்குது உலகில்
நீயாய் முயன்றால்
மட்டுமே வாழ்வை
நேர்வழிதன்னில்
மாற்றிட முடியும்

நன்மையை விதைத்திட
நானிலத்தில் வன்முறை
தேவையில்லை அறிவாய்
அன்புநெறி கண்டு
வாழ்வில் தர்மம்
தனைக் கையிலெடுத்து
நாம் வாழும்
முறை மாற்றும்
வல்லமை உனக்குண்டு

எமக்கும் மேலே
ஒரு சக்தி உண்டென
எண்ணத்தில் ஏற்றிட்டு
அதற்காய் பாதைகள்
வகுத்திடுவாய்

உனைக் கண்டு
தமிழன்னை நெஞ்சம்
மகிழ்ந்திடுவாள் நேற்றைகள்
என்றும் உன் வாழ்வில்
என்றுமே திரும்பி வரா

இன்றைகளில் நீ
நிம்மதி கண்டு
நாளை உன் சந்ததி
வாழும் வகைக்காய்
நாலு நற்செயல்களை
விதைத்திடுவாய்

நாளைகள் உந்தன்
பெயர் கொண்ட
கொடியேற்றி சீரிய
வாழ்வைக் கண்டிடுமே !

சக்தி சக்திதாசன்