வெற்றிப் பயணம்
வெற்றி வேண்டுமோ தம்பி உனக்கு
சிற்சில வழக்கு
சிந்தையில் இருக்கு
கற்றுத் தருகிறேன்
நானதை யுனக்கு
பற்றிக் கொள்ளின்
பயணம் சிறக்கும்
நெற்றிப் பொட்டில்
வெற்றித்திலகம் பூக்கும்
உனக்கான இலக்கினை
நீயே குறி
இயலாமைச் செட்டையை விரைந்தே உரி
வேரோடு பகையைத் தறி
காற்றோடு கரைந்தே போகுமவர் வெறி
வெல்வதற்கான சூட்சுமத்தை அறி
வெல்வேன் என்பதை மனதில் பொறி
பாச வேசங்களைத் தறி
பழிதரு ஆசைகள் அண்டின் அறுத்தெறி
நேர விரயத்தைத் தடு
பொருத்தமான
முயல்வினையே ஆயுதமாய் எடு
பயிற்சி தேவையாயின் தொடு
ஓய்வு வேண்டின் கொடு
ஒன்றித்த மனதுடனே உழை
ஒவ்வொரு நாளும் அவ்விதமே நுழை
காவலாகட்டும் உனது கண்ணிய நெறி
கூட வரட்டும்
உந்தன்செயல்வெறி
ஏவல் செய்யட்டும்
ஏந்திய ஐம்பொறிகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்.