சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-279. தலைப்பு!

“விடியுமா தேசம்”
………….
எங்கட தேர்தல்
முடிந்தது – இன
வாதம் மீண்டும்
நிமிர்ந்தது!

சங்கடம் தீருமா
நாளை? – அட
விடியுமா தேசம்
காலை ?

எந்த உரிமையும்
இல்லை – தமிழ்
பேசியதால் வந்தது
தொல்லை!

தலைவர் ஆண்டார்
நன்று – நாங்கள்
மகிழ்ந்தோம் வாழ்வில்
அன்று!

ஒளிவிடும் நாங்கள்
மெழுகு – ஈழ
மண்ணில் வாழ்ந்தோம்
அழகு!
உடைமை உரிமையைப்
பறித்தார் – எங்கள்
உறவை மண்ணிலே
புதைத்தார்!

விடியுமா மீண்டும்
தேசம் – இன
வெறியரால் எல்லாம்
நாசம்!

புத்தர் போர்வையில்
வேடம் – நமக்குக்
காட்டினார் காடையர்
பாடம்!

ஒற்றுமை வேண்டும்
நமக்கு – இதை
உணர்ந்தால் விடியும்
கிழக்கு!

தலைமுறை வாழ
நினைப்பாய் – தமிழ்க்
கல்வியை ஊட்டி
வளர்ப்பாய்!

இளமைத் துடிப்பில்
இருப்பாய் – தமிழ்
இனத்தை உயர்த்த
உழைப்பாய்!

ஐநா மன்றில்
கோரிக்கை – ஈழம்
அடைய உயர்த்துவோம்
கோடிக்கை!

தேசிய விடுதலை
தோற்குமா?- தமிழர்
திரண்டால் உலகம்
ஏற்குமா?

ஆசியாக் கண்டமே
அலறுமே – இயற்கை
நினைத்தால் ஈழம்
மலருமே!

நாளை விடியும்
தேசமே – தமிழர்
இணைந்தால்தாயின்
பாசமே!

தாய்மொழி தமிழே
இணைக்குமே – ஈழம்
உறுதியாய் ஓர்நாள்
பிறக்குமே!

. ஆசிரியர்..
அபிராமி கவிதாசன்
.24.09.2024