சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 279
விடியுமா தேசம்
உள்ளமெனும் ஓடையிது
உணர்வென்னும் நீரோட்டம்
உறைந்துவிட்ட உணர்வுகள்
உறுத்துமெமைக் காலமெல்லாம்

விடியலின் வாசலுண்டு
வெளிச்சமங்கு தெரிவதுண்டு
உருவமில்லா வெளிச்சமதை
உணர்வதொன்றே விடியலன்றோ

காற்றடிக்கும் வேளையிலே
காய்ந்த இலை பறப்பதுண்டு
காலமெங்கு புதைக்கிறதோ
கரைந்துபோகும் உரமாக

நீருக்கு வடிவமில்லை
நிறைக்குமிடம் அறிவதில்லை
வேருக்குள் பொழிந்திட்டால்
விருட்சமங்கு வளர்வதுண்டு

காலத்தின் சுழற்சியிலே
காட்சிகள் மலர்வதுண்டு
சாட்சிகளாய் பார்த்திட்டால்
சலனமில்லா வாழ்க்கையுண்டு

ஆன்மாவின் பயணமிது
அனுபவங்கள் பரிசாகும்
அடுத்தொரு பயணத்துக்கு
அடைவதெல்லாம் சேகரிப்பு

பாதையொன்றைப் போடுகிறோம்
பயணமதில் நிகழ்கிறது
இன்பமும் துன்பமும் நமதே
இறைவனை ஏன் சாடுகிறோம் ?

கடந்து செல்லப் பாதையுண்டு
கடவுளைக் காண வழியுமுண்டு
எமக்குள்ளே உறைந்திருக்கும்
எம்மிறைவன் சிரிக்கின்றான்

ஏற்றுக்கொண்டு வாழ்ந்திட்டால்
எல்லாமே புரிந்திடலாம்
எமக்குள்ளே தியானத்தால்
எம்மை நாமே அறிந்திடலாம்

சக்தி சக்திதாசன்