வணக்கம் உறவுகளே!
மனதுள்ளே ஓர் பார்வை
மனதுள்ளே பலபார்வை மௌனங்கள் நிலையாகும்
தனதான பாதையிலே தடைகளுமே ஓங்கிவர
கலையாத கனவுக்குள் கால்தடங்கள் வலுவாகும்
தொலைகின்ற நாட்களுக்குள் எதிர்பாரா இன்னலுமே!
அலைபாயும் ஆற்றலினால் ஆழ்ந்தெடுக்கும் முத்துக்கள்
மலையாக உயர்கின்ற மகிழ்ந்தெடுக்கும் பொற்குவியல்
விலைவாசி ஏறிவிட விலையான தமிழ்மொழியும்
உலைவைத்து உணவளிக்க உணர்வான நோக்கங்கள்
பருவகால மாற்றம்போல் பாரினிலே பலமாற்றம்
அருவிவரும் கானொலிகள் அகிலமெல்லாம் பவனிவரும்
அருவருப்பாய் சிற்சிலவும் அரும்பிவரும் கானொலிகள்
தருகின்ற விசித்திரங்கள் தரணியிலே கண்டுவர
அகராதி அந்தாதி அத்தனையும் மூட்டைகட்டி
சகமாரி பொழிகின்றார் சரித்திரத்தில் தான்பதிக்க
அகமதிலே அகங்காரம் அத்தனையும் வெளிப்பூச்சி
மகராசி இவர்களென்று முத்திரைகள் பதிக்கின்றார்!
நிதமான விடியலுக்குள் நிதம்தேடும் என்கவிதை
விதவிதமாய் வடித்தெடுக்கும் விந்தையான சொற்புணர்ச்சி
மதங்கொண்ட யானைகள்போல் மிருகங்களின் காழ்ப்புணர்ச்சி
இதமான தமிழருக்குள் இதுவல்லோ ஓர்பார்வை
நல்லறிவு நாலறிந்தால் நாடிவரும் நல்லதுவே
வெல்லுமொரு வாழ்வுக்கும் வெற்றிதனை ஈட்டிடுமே
தொல்லைகளும் நீக்கிவிட்டால் தொடுவானம் நமதாகும்
எல்லைகளைத் தாண்டிடவே ஏற்றமிகு நற்பார்வை
சரளா விமலராசா
சுவிற்சர்லாந்து
நன்றி வணக்கம்.