சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

வாக்காளனே கேள்
——————————–=–
சனநாயகத் துடுப்பே வாக்கு
வயதுவந்த உனக்கு முண்டே வாக்கு
நீயும் பண்ணாதே இடக்கு
வீழ்ந்திடவல்ல வாழ்ந்திடவே வாக்கு
விற்பனைக்கல்ல உந்தன் வாக்கு
அதன்வீரியத்தை நீயும் நோக்கு
சிந்தித்தே நீயும் போடு வாக்கு
சாயும் வரைக்கும் அதனைக் கொண்டே
கயவரைத் தாக்கு
தேய்ந்தே போகட்டும் அதிகாரத் துடுக்கு
சேயும் நாடும் வாழுமிதனால் சிறந்து
சேரும் வளங்கள் சிறப்பாய் உயர்ந்து

கட்சிகள் புதிதாய் பிறக்கும்
உச்சிகள் எங்கும் கொடிகள் பறக்கும்
மதிலெங்கும் சுவரொட்டிகள் நிறையும்
முலைமுடுக் கெங்கிலும் மேடைகள் முளைக்கும்
முச்சந்தியெங்கும் ஒலிவாங்கிகள் கூவும்
முளைவிடாக் கொள்கைகள் முரண்கள் பலதையும் காவும்

அதையும் இதையும் சுட்டி
ஆசை வார்த்தைகள் கொட்டி
ஆதரவாய்க் கரத்தைப் பற்றி
ஆட்டுவார் உன்னை
ஆளுக்கால் சுற்றி
அவரவர் சுகத்தை மட்டுமெண்ணி

சாயாதே சரியாதே
சகவாசத்தை நம்பாதே
கூணாதே குனியாதே
குற்றேவல் செய்யாதே
சண்டித்தனம் கண்டு அஞ்சாதே அசராதே

நீயாயே சிந்தித்து போடு
உந்தன் வாக்கை
தீயாகி நற்தீர்பை வழங்கட்டும் அதன்சேர்கை

மனோகரி ஜெகதீஸ்வரன்.