சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

தாயே ! தமிழே !
தாயீந்த பாலுடன்
தமிழ்தந்த அன்னையே !

பிறந்தேன் என்பது பெரிதல்ல
தவழ்ந்தேன் என்பதும் புதிரல்ல
பேசினேன் என்பதும் புதுமையல்ல
நடந்தேன் என்பதும் அதிசயமல்ல

தமிழ் எந்தன் நாவில் ஊறிடும்
வகை கண்டது உந்தன் வரமே தாயே !
தமிழென்ன செய்தது எனக்கு என்பதல்ல
தமிழுக்காய் நானென்ன செய்தேன் ?

உள்ளத்தில் கவிதையாய் உதித்திடும் போது
வெள்ளத்தில் ! ஆனந்த வெள்ளத்தில் நான்
மிதப்பது என்னவோர் விந்தையம்மா ?
சிறப்பது நீ தந்த தமிழால் அல்லவோ ?

விந்தையாய் உலகில் தவழ்வதை
சிந்தையில் நோக்கிடும் கோணத்தை
இந்தைநாள் வாழ்வினில் கொண்டிட
முந்தைநாள் அனுபவங்கள் புகட்டின

ஈழத்தில் பிறந்து தவழ்ந்ததும் இன்று
இங்கிலாந்தின் தத்துப் பிளையாய் வாழ்வதும்
இனிய தமிழ் தந்த தமிழக உறவுகளும்
இகத்தினில் நானடைந்த வரங்களென்பேன்

படித்திடும் வரிகள் யாவையும் மனதில்
சுவைப்பது தமிழாய் உள்ளதால் அல்லவோ ?
கிடைத்திடும் பொழுதுகள் யாவையும் தமிழுக்காய்
படைத்திடுவேன் ஆயிரம் படைப்புகள்

விதித்திடும் விதியாய் உள்ளத்தில் யான்
வரித்திட்ட செய்தியும் ஒன்றே
மரித்திடும் நாள்வரை தமிழ் எழுத்தினை
மறந்திடேன் என்பது அதுவே !

சக்தி சக்திதாசன்