மாறுமோ மோகம்
மாறுமோ மாறுமோ
வெளிநாட்டு மோகம்
ஆறுமோ ஆறுமோ
நான் கொண்ட தாகம்.
நிறைவாய் இருந்த
நிலத்து நினைவுகள்
மறைவாயிருந்து என்
மொளனத்தை கலைக்குதே!
உன்னத தாகத்தோடு
ஒட்டிக்கிடந்த என் உணர்வுகள்
வாழும் தேசத்து மோகத்தோடு
ஒட்டிக்கொள்ள மறுக்கிறதே!
வெளிநாட்டவர் மோகங்களுக்குள்
விழுந்து கிடக்கின்ற எம்மவர்
ஒரு காலத்தில் ஒழுக்கம் மிக்க
ஒருவர் பின்னே வாழ்ந்த வாழ்வை
மறந்தே நிற்கின்றார்கள்.
கட்டுப்பாடுகளை விதைத்து
ஒழுக்கத்தை அறுவடைசெய்தவன்
எங்கள் தலைவன் காலம் என்பதை
ஈழத்தாய் இன்று காட்டி நிற்கின்றாள்.
புலத்தில் ஒரு கொண்டாட்டம்
என் மனதில் அதுவே திண்டாட்டம்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
இது மோகத்தால் வந்த தாக்கங்கள்.
மாமன் மாமி முன்பே
மாலையோடு மணமகனை
நாடிவரும் மணமகளின்
குத்தாட்டம்.
அப்பனும் மகனும்
மாமனும் மருமகனும்
சியேர்ஸ் சொல்லி
தண்ணியடிச்சு தகராறு கண்ட
கொண்டாட்டம்.
ஒருவனுக்கு ஒருத்தியென
ஒழுக்கத்தோடு இருந்தவர்
விரல் விட்டு எண்ணுமளவில்
கரைத்துவிட்ட மோகம்!
வயது பேதமின்றி
உறவு முறையுமின்றி
முனைகின்ற காமத்துக்கு
முக்காடு போட்ட மோகம்!
வசதிகள் கொஞ்சம் வலுத்ததினால்
பவர்களும் பந்தாக்களும்
வரம்புகள் மீறச்செய்கின்ற
வரட்டு மோகம்!
இனி எம்மவரை விட்டு
என்றைக்குமே மாறாது
என்பதே எங்களின்
பெரு ஏக்கம்.
எல்லாமே மாறிப்போச்சு
மரியாதைகள் மரித்துப்போச்சு
இடம் பொருள் ஏவல் என்று
பார்ப்பதும் மறந்தே போச்சு.
எந்தனை உயிர் மூச்சுகள்
எங்கள் கலாச்சாரத்தை
கட்டிக் காத்திட எம் கண்முன்னே
பறிபோயிருக்கும் அவர்கள்
தியாகத்தை கொஞ்சம் நினையுங்கள்.
இன்னும் எத்தனை எத்தனை
சீர்கேடுகள் தந்த மோகம்
என்றைக்கு மாறுமோ!
அன்றைக்கே என் மனம் ஆறும்.