சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

பெண்மையைப் போற்றுவோம்

பெண்மையை போற்றாத நாவென்ன நாவா
உண்மையை உரைப்போம் உரக்கவே வாவா
தாயெனும் பாத்திரத்தில் பாசத்தை ஊட்டுவாளே
தாரமெனும் பாத்திரத்தில் காதலைக் காட்டுவாளே

பெண் மேன்மையானவள் பெருமைக்குரியவள் மெய்
என்பதை அறியாதது தருகின்றது வருத்தத்தை
ஓரிரு வித்தியாசங்களே ஈரினத்திற்கு இடையில்
ஓர்பாதியெனக் கொண்டுவிட்டால்
பாகுபாடேது நடையில்

கருவைத் தாங்கவென அவதாரம் எடுத்தாள்
உருவங்களைச் செய்தே உலகிற்கு கொடுத்தாள்
பெண்ணின்றி அமையாது பூலோகம் எனவென்று
கண்களாய் அவளாக நகர்கின்றது பூமியின்று

வாழ்த்திடவே இவளை வார்த்தைகளோ ஏட்டிலில்லை
வாழ்வின் பிறப்பிடத்தை பாடாவிட்டால் பாட்டேயில்லை
தன்சுகத்தை இழந்து சுமைகளை தாங்கிடும் தன்மை
பெண்மையது என்பதுவும் ஆண்டாண்டாக உண்மை

பின்னிருந்து காட்டிய வழிகளால் ஏற்றங்கள்
முன்னிறுத்தி அவளை போற்றுமட்டும் போற்றுங்கள்
உயிர்களை உற்பத்தி செய்பவளை வாழ்வுக்குள்
உயர்வான உறவாக்கி உன்னதப்படுத்துவோமே வாழ்த்துக்குள்

ஜெயம்
18-03-2024