வேலி அடைப்போம்
பனை ஓலை வெட்டி
மட்டையுடன் ஒரு பக்கம்
தென்னை ஓலை கிடுகு
மறு பக்கம் அழகாக்கும்
முட்கம்பி முள் கிலுவை
முதுகினை பதம் பார்க்கும்
முட்டுக்கட்டை பூவரசு மரமும்
முண்டி அடித்து வளர்வாகும்
அண்டை வீடு பார்க்காமல்
அணைத்து காத்த வேலியாகும்
ஆணித்தரமாய் எமது குளியலுக்கு
அடைத்து மறைத்த வேலியாகும்
நாலு பக்க வேலிகள்
நல் இனிய உறவாகும்
நன்மை தீமை வந்தாலே
நடுப் பொட்டு வழியாகும்
அக்கம் பக்கம் எல்லாம்
ஆணி அடித்த மதிலாகும்
அழகு கொண்ட வேலியும்
அரண்மனை சுவர்போல் உருவாம்
அடுத்த ஜென்மம் ஒன்றென்டா
அடைத்து பார்த்து காப்போமே