வேலி அடைப்போம்
எங்க வீட்டு சோலியை
மறச்ச்சு நின்ற வேலி
அயல் வீட்டுடன்
எல்லைக்கு சோலியாயும்
ஆனதிந்த வேலி.
கறையான் புத்தெடுக்க
இடம் கொடுத்த வேலி
அதை கோழி பெறுக்கி
உணவாக்க விட்ட வேலி.
வெட்டி பனை ஓலை மிதிச்சு
தட்டி வடிவா அடுக்கி வச்சு
அளவளவாய் வெட்டி
அழகாய் அடைச்ச வேலி.
அடைச்சு முடிய அப்பன்
அழகு பாத்த வேலி
நாலு வீடு தாண்டும் வரை
புதுசா அடைச்ச ஓலை மணம்
அடிக்கும் வேலி.
அப்பன் சித்தப்பன்
மாமன் மச்சான் என
உறவை எல்லாம் அழைச்சு
உறவையும் சேர்த்து அடைச்ச வேலி.
வருசத்துக்கு ரண்டு தரம்
அடைச்ச வேலி
வேலி அடைப்புக்கு பள்ளிகூட
விடுமுறையும் தந்த வேலி.
முழுசா வேலி அடைச்சா
பெருசா உறவில்லை எண்டு
சிறுசா பொட்டு வச்சு
போய் வந்த வேலி.
வியாள் பிடிக்க குத்தூசியால்
குத்துப்பட்ட வேலி
வரிஞ்சு கட்டிய பொச்சு கயிறால்
வலுத்து நின்ற வேலி.
பூந்து நாய் புகுந்தால்
பொல்லாப்பு வருமென்று
கழிச்சுவைச்ச கருக்கு மட்டை
செருகி விட்ட வேலி.
பாதி பொத்தல் விழுந்தா
தென்னோலை
மீதி பொத்தலுக்கு
காவோலை எண்டு
சிக்கனத்தால் ஆயுள் நீண்ட
எங்க வீட்டு வேலி.
கறையான் பிடிச்சு
தட்டி கொட்டின வேலி
இப்ப பிடிக்க கறையானுமில்ல
வேலியும் இல்லை.
சோலி பல கூடிப்போச்சு
வசதி கொஞ்சம் அசதி மிச்சம்
போலி வாழ்வு புகுந்ததினால்
வேலி எல்லாம் மதிலா போச்சு.
வேலி அடைப்புக்கள்
கல் மதிலால் மறந்தன
அணைஞ்சிருந்த உறவுகள்
கல் மனதால் மறந்தன.