சந்தம் சிந்தும் சந்திப்பு255
பகலவன்
மேற்கிலே விழுந்து விடும் ஆதவன்
மீண்டும் கிழக்கிலே எழுவதில்லையா ?
விழுந்து விடும் அலைகள் … அவை
மீண்டும் எழுவதில்லையா ?
எதற்கு நீ கலங்குகிறாய் தோழா ?
அதற்கு ஏன் மயங்குறாய் வீணே !
விளக்குமொரு நிகழ்வு உலகில்
விடியுமொரு இரவு நிதமும் !
முடிக்குமொரு துணிவு கொண்டு
எடுக்குமொரு செயலை நீயும்
தடுக்குமொரு நிலையை மாற்று
கிடைக்குமொரு இனிய செய்தி
முத்து முத்தாய் தெறிக்கும் வியர்வை
கொத்துக் கொத்தாய் பறிக்கும் வேளை
சொத்துச் சொத்தாய்க் குவிப்போர் அறியார்
கட்டுக் கட்டாய் சுமக்கும் சுமைக|ளை
விட்டு விடு உந்தன் துயரைத் தோழா
முட்டி விடு அநீதியின் சுவரை
வெட்டி விடு உணரா மனிதரை
கண்டுவிடு வெற்றியின் கரைதனை
தொட்டுவிடு வானம் அருகிலே
எட்டிவிடு வெற்றியை வாழ்வில்
தட்டிவிடு இடர்களை துணிவுடன்
பூட்டிவிடு தோல்வியைத் தொலைவில்
காணும்வரை வெற்றியும் கனவே
கண்டவுடன் வியந்திடும் உலகே
காலம்தரும் பரிசினை ஏற்று
காயங்களை ஆற்றியே தேற்று
சமுதாய முன்றலிலே நீயும்
சாதனை மலராய் மலர்ந்திடு
சந்திக்கும் எளியோரின் வாழ்வில்
சிந்திடும் ஒளியாக மிளிர்ந்திடு
சக்தி சக்திதாசன்