சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 256 ]
“பகலவன்”

வைகறையில் தினமெழுந்து உலாவரும் பகலவனே
உலகினிருள்நீக்கி ஒளியேற்றி அகவிருள்போக்கும் பகலவனே
பயிர்பச்சை பராமரித்து பல்லுயிருண்டு பசியாறவைக்கும் பகலவனே
பொங்கலிட்டு நன்றிசொல்லும் மக்களுக்கு மறத்தையுமழிப்பாய் பகலவனே

பருவகாலங்களை ஒழுங்காய் வகுக்கும் பகலவனே
மாரிமழை,கோடைவெப்பம் வசந்தத்தின் இனிமை
நீயல்லால் வேறு எவர் தருவார் பகலவனே?
பயன்கருதிச்செய்யாமல் வழங்குகிறாய் பகலவனே

அழகான கலையிலே அகிலத்தைத்துயிலெழுப்பும் பகலவனே
அறியாத இடங்களையும் கண்காணிக்கும் காவலனே
மாறாத குணங்கொண்டு உலகைச்சுற்றும் வாலிபனே
பலரும் உன்னைச்சுற்றுவதால் பாவையாகமாறிடாதே
மாலையில் நீ மறைந்தபின்னர் உனைத்தேடிவரும் மங்கைநிலா
காலையில் நீவரும்போது நாணத்தால் நிறுத்திடுவாள் தன்னுலா

ஊடலிருந்தும் அவளுக்கு ஒளியேற்றி மகிழ்ந்திடுவாய் பகலவனே
உங்களிரகசியக்காதல் ஊரறிந்த பரகசியம் பகலவனே
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசித்து மகிழும் இவ்வுலகம்
உச்சியில் நீ நின்று கொதிக்கும் போது திட்டித்தீர்க்கும் இதேயுலகம்
மனித வாழ்வில் உயரும்போது கொண்டாடி மகிழும் இனசனம் தாழ்ந்தபோது தயங்காமல் உதைத்துத்தள்ளும் மனிதகுலம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.