பங்குனி
எங்கும் நீ!
எதிலும் நீ!
பொங்கும் அருளின்
புலமை நீ!
பங்குனி வந்தால்
புதுப்பொலிவும் நீ!
இங்கு நான்!
அங்கு நீயென
பிரிந்தே இருந்தாலும்
எங்கும் உனதருள்
என்னையே தொடருதையா!
நீன்னருளின்றி
நான் இப் பூமியிலே
வாழ்திடலாகுமோ வேலையா!
காலங்கள் என்னை எங்கோ
கடத்திச்சென்றாலும்
என் நினைவெல்லாம்
நீயமர்ந்திருக்கும்
இருப்பிடத்தையே
சுற்றிக்கொண்டு
என்றைக்குமே இருக்குதையா
எந்தன் கந்தையா!
பங்குனியில் உற்சவம் கொள்ளும்
பண்ணாகம் விசவர்த்தனையானே!
உனை பணிந்திடார் எவரையா
உன் உற்சவகாலங்களில்
உன் கூடவே இருந்து
உனக்கான பணிகளை
பிரியத்தோடு செய்த
நினைவுகள் எனைவிட்டு
பிரியவே இல்லை ஐயா!
பனிகொட்டும் நாட்டில்
பிணிகளை சேர்த்தபடி
வாழ்கின்ற வாழ்வு
தினமும் என்னை பிதற்றுதையா!
உன் பாதம் பணிந்தபடி
நாட்களை கடக்கின்றேன்
மீண்டும் என்னை
உன் பணிக்காக அழைப்பாய்
என்ற பேராசையோடு.
எத்தனை பங்குனி உற்சவங்களை
கண்டு கொள்ள முடியாமல்
கதிகலங்கி கிடக்கின்றேன்.
என் கவலைகள் தீர்ந்திட
காலம் ஒரு நாள் மாறும்
உனை காணும் பாக்கியம்
வெகுவிரைவில் கைகூடும்
எந்தன் வேலையா!