சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

பாமுக பூக்கள் சந்தம் சிந்தும் சந்திப்பு 252. காதலர்

“இளங்காலைத் தென்றல் வீசும்
மனமெங்கும் இன்பம் பூசும்
ஏதேதோ கதைகள் பேசும்
நினைவெல்லாம் கமழும் வாசம்

கனவிலொரு காதல் மலரும்
கண்விழித்தால் கலைந்து போகும்
நீந்துமொரு படகாய் மிதக்கும்
நீங்காமல் உணர்வுகளோ சீண்டும்

விழிமூடி இமைகளோடு சாயும்
விளையாடும் உறவுகளின் பாரம்
கனிதாங்கும் கொடிக்கென்ன பாரம்
கனிகொண்ட சுவைதானே நிலைக்கும்

வாலிபத்தில் வனப்பான காதல்
வயதான பின்னாலே நட்பாம்
உடலல்ல உள்ளங்களே கூடும்
உரசுகின்ற உண்மையது வாழும்

தேடல்களின் பாதையெல்லாம் மாறும்
தெரிந்துவிடும் உண்மைகள் சாடும்
உடலினுள்ளே ஆன்மாவின் இருப்பு
உண்மையான தேடலதன் துடிப்பு

வாழுகின்ற வாழ்கையதன் நோக்கம்
விளங்கிட்டால் பயணமது இனிக்கும்
மூச்சிருக்கும் கணங்கள் ஒவ்வொன்றும்
முழுதாக அனுபவித்தல் அறிவுடமை

நேற்றிருக்கும் நாமின்று இல்லை
நாளையது தருவதெது அறியோம்
இன்றுதான் எமக்கிருக்கும் உடமை
இனிப்பாக்கி வாழ்தலொன்றே கடமை

இல்லாத ஒன்றைத் தேடித்தேடி
இருக்கின்ற கணங்களைத் தொலைத்து
முடிக்கின்ற வாழ்க்கையைத் தவிர்த்து
வாழ்ந்திடுவோம் கிடைத்ததை விரும்பி

சக்தி சக்திதாசன்