சசிச
பொங்கலோ பொங்கல்
வியர்வையாளரின் உயர்வைச்சொல்ல வந்தது ஒருவிழா
வயற்காட்டு மன்னவரை பெருமைப்படுத்தும் பெருவிழா
புதியபானை மட்டுமா பொங்கியே வழிவது
துதித்துக்கொண்டே ஆதவனை நன்றிதனை மொழிவது
அறுவடையின் ஆனந்தம் உருவங்களில் தெரியும்
புதுவுடுப்பு கோலந்தாங்க அழகு நடைபுரியும்
சிந்தைக்குள்ளே பொங்கலதும் விந்தையதை நிகழ்த்தும்
வந்துகொண்ட தைமகளால் தலைமுறையும் மகிழும்
சேற்றில் உழவர் கால் வைத்தார்
சோற்றில் அவரால் கை வைத்தோம்
இருள் போக்கும் ஆதவனாம் இத்தை
அருள் தந்தே காத்துவிடும் இனத்தை
நன்றி பாராட்டும் அழகான தருணமன்றோ
விண்ணையும் மண்ணையும் போற்றுவதெம் கடமையன்றோ
பொங்கலின் சுவையாக காலமினி அமைந்துவிடும்
மங்காத சூரியனாய் வாழ்தேசம் வலம்வரும்
மங்கல தினமிது இன்பங்களாய் தந்திடும்
திங்களின் முழுவுருவாய் வெளிச்சத்தினை சிந்திடும்
வையகத்தில் பெருநலன்கள் பெருவாரியாய் சேர்ந்திடும்
மெய்வருந்தும் நிலைமாறி ஆரோக்கியம் பூத்திடும்
ஜெயம்
16-01-2024