சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 244
21/11/2023 செவ்வாய்
பிறந்த மனை
———————
மூன்று பக்கமும் கிடுகுவேலி,
முன்பக்கம் ஒரு சின்னக்கடை,
ஊன்று கோலாய் பல்தூண்கள்,
உயர்த்தி நிற்கும் ஓட்டுக்கூரை!

நாற்சார் வீடததன் சரிநடுவே,
நாற்சதுர முற்றம் ஒன்றுடனே,
மேற்கே மூன்றறை இருந்தனவே!
மேற்தட்டும் ஒருங்கே அமைந்தபடி!

தெற்கு அறையில் எம்குடும்பம்,
தந்தையும் தனயர் இருவருமாய்!
வடக்கு அறையில் மாமனாரும்,
வளமாய்,ஒன்றாய் வாழ்ந்தோமே!

நடுவில் இருந்த அறையதுவோ-
நம்தாயின் தந்தை, தனதென்பார்!
கிடுகால் வேய்ந்த கிழக்கறையில்,
கீழைத்தேயச் சமைய லறையும்!

சமைய லறையின் தொடராக,
சாணி மெழுக்கிட்ட ஓரறையில்,
சமயம் பார்த்து உதவிடும்நல்
சற்குரு, ஆச்சி உறங்கிடுவார்!

எல்லோரும்,கூட்டுக் குடும்பமென
என்னறிவு தெரியும் நாள்வரையில்,
பல்லோரும் போற்ற பாசமுடன்,
பகையின்றி வசித்தோம் ஒன்றெனவே!

காணியும் இன்று எமக்கில்லை!
காட்டிடக் கட்டிடம் ஏதுமில்லை!
பேணியும், போத்தலும்,புல்பூண்டும்,
புதிதாய் குடித்தனம் நடத்துதங்கே!

நன்றி
மதிமகன்