வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 664

தியாகமே தீர்ப்பானதா

பன்னிரு நாட்களாய் பட்டினி யுத்தம்
தன்னையே அழிக்க உடன்பட்ட சித்தம்
கொண்ட கொள்கைக்காய் ஆயுள் சுருங்கியது
உண்டான தீபத்தால் தியாகம் கருகியது

வல்லூறுகள் கூட்டாக செய்திட்ட சதி
நல்லூரில் முடிந்தது பார்த்தீபன் விதி
வில்லை வைத்துவிட்டு உரிமைக்கான தவம்
இல்லை வரமென்றது அரச பயங்கரவாதம்

எங்கே போனது அகிம்சைக்கு நியாயம்
இங்கே தெரிந்தே நிகழ்ந்தது அநியாயம்
பாரதம் செய்தது மன்னிக்கமுடியாத பாதகம்
வேரதை அறுக்கவே பார்த்தார்கள்  ஜாதகம்

அன்று அவன்கண்ட இலட்சிய கனவு
இன்றும் அவன்சார்ந்த  இனத்திற்கு உணவு
என்றும் தணியாது தேசத்தின் தாகம்
மண்ணில் வற்றாது ஈகையின் பிரவாகம்

ஜெயம்
20-09-2023