சந்தம் சிந்தும் கவிதை

சக.தெய்வேந்திரமூர்த்தி

வீதிவிபத்துகளால் விளைந்த இழப்பினைக்கண்டித்து..

விருப்பத்தலைப்பு.
ஏனிந்த அவசரம்
“””””””””””””””
ஏனிந்த அவசரம்
எவருயிர் காவுக்காய்?
ஊனினை அழிக்கவா?
உயிரதை மாய்க்கவா?
ஊனமாய் உறவுகள்
உலகிலே நடக்கவா?
ஈனமாம் உன்குணம்
இன்றுடன் முடியுமா?
தந்தையைக் கொல்லவா?
தாயினைக் கொல்லவா?
சிந்தையில் என்னவுன்
சிறப்பிலா எண்ணங்கள்
பந்தங்கள் தவிப்பதைப்
பார்த்துமேன் ஓட்டமோ?
சிந்திடும் இரத்தமும்
சீரெனக் கொள்வையோ?
கொலையெனத் தெரிந்தும்பின்
கொள்கையை மாற்றிடா
அலையென விரைகிறாய்
அடுத்துப் பலிஎடுக்கவா?
விலையிலா உயிர்களை
விரட்டியேன் அடிக்கிறாய்
தலையிடாச் சட்டத்தின்
சந்திலே நுளைகிறாய்
மலையென எழுகிறாய்
மறுபடி விரைகிறாய்
ஓருகணம் அவர்களின்
உறவினை நினைத்திடு
வருமுனர் தடுத்திட
வளைவிலும் அமைதிகொள்
புறப்படு நேரத்தை
தூரத்தால் முடிவெடு
இறப்புகள் தடுக்கநீ
இதயத்தில் இடங்கொடு
முந்திட நினைப்பவர்க்
குடனடி இடங்கொடு
நந்தியாய் மறித்தொரு
நகர்தலில் போட்டியேன்?
காலையில் மாலையில்
கடக்குமுன் பாதையில்
கால்நடை உயிர்க்கும்நீ
காலனோ சொல்லடா?
நேரத்தைத் துரத்தவே
வேகத்தைக் கூட்டுதல்
ஈரத்தைக் காட்டிடா
இழிசெயல் அல்லவா?
விதியதன் பிழையிலை
விரைவுதான் பிழையடா
சதியினைச் செய்துஅவர்
சாவினை நிகழ்த்தினை
கொலையிது உன்பழி
கொடுமையுன் பேரிலே
தலைமுறை காத்திடாத்
தவறுதான் மூடனே!
கடுகதி உனக்கொரு
களிப்புறு ஓட்டமோ?
படுகொலை நடத்தினால்
பழியுனை வருத்துமே
தடுத்துனை ஆட்கொளத்
தவறுமொன்று போதாதோ?
அடுத்தடுத் துயிர்ப்பலி
அகாலமென் றடக்கவோ?
சாலையின் விதிகளில்
சாகசம் தேவையா?
வேலையில் பற்றுவை
வேற்றுயிர் காக்கவே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.