சந்தம் சிந்தும் சந்திப்பு.
“””””””””””””””””””””
பாட்டி
“””””””
பாட்டி நல்ல பாட்டி
பாசம் கொண்ட பாட்டி
ஊட்டி அன்பை ஊட்டி
ஊக்கம் தந்த பாட்டி
ஆட்டிக் கம்பை ஆட்டி
ஆட்டம் பார்க்கும் பாட்டி
பூட்டி வைத்த உண்மை
பூக்க வைக்கும் பாட்டி
பட்டுக் கன்னம் தொட்டு
பஞ்சு மிட்டாய் தந்து
சொட்டுங் கண்ணீர் ஒற்றி
சொக்கத் தங்கம் என்று
விட்டுத் தள்ளச் சொல்லி
விண்ணை எட்டு என்றே
கட்டுக் கூந்தல் கோதி
காதல் செய்த பாட்டி
பாட்டுஞ் சொல்லித் தந்து
பாசம் காட்டும் பாட்டி
காட்டும் அன்பில் என்னைக்
கட்டிப் போட்ட பாட்டி
வீட்டுக் குள்ளே பண்பை
வென்று தந்த பாட்டி
நாட்டுப் பற்றி னாலே
நாளும் வெந்த பாட்டி!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.