வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 631
எமக்காக தம் வாழ்க்கையை தந்தவருக்காய்

குழிகளிற்குள் விதைக்கப்பட்ட எம்மினக் காவலரை
இருகரங்கூப்பி நன்றிதனை தெரிவிக்கும் நேரமிது
அழிந்தது மறவர்களின் உடல் மட்டுந்தான்
அவர்கொண்ட கனவு நனவாகும்நாள் வெகுதூரத்திலில்லை
மொழிக்காக தமக்குத்தாமே முடிவுரை எழுதியவர்கள்
விழிநீரை காணிக்கையாக்குகின்றோம் எம்குல சாமிகளே
மரணத்தை சந்தித்தே இனத்தைக் காத்தீர்கள்

ஆவியதை எதிரியுடன் களங்கண்டு துறந்தீர்கள்
கூலிப் படையணிகள் அஞ்சி நடுங்கியதே
சாவில்கூட வெற்றிகளை குவித்தே சரிந்தீரே
சரித்திர நாயகர்களாக இன்றும் வலம்வந்தீர்
காவியத்தில் உங்கள் பெயர்கள் உச்சரிக்கப்படும்
காவியதை கொண்டுசெல்லும் அடுத்த தலைமுறை
தூவி காந்தள் மலர்களை அர்ச்சித்து
நமக்காக உயிர்நீர்த்த தியாகங்களை வழிபடுவோம்

கார்த்திகை ஈழவர்க்கு உயிரோரொட்டிய புனிதமாதம்
வானமுடையினும் பூமி பிளப்பினும் நிலைக்குமது
ஊர்திரண்டே மாவீரர் நாளமதை அனுசரிக்கும்
விழிசொரியும் உறவுகளின் உள்ளக்குமுறலால் விளங்கும்
பார் அதனின் திசையெட்டும் பார்க்கின்றது
அறம் கொண்டவர் தமிழரென முணுமுணுக்கின்றது
தீர்வு ஒன்று வெகுவிரைவில் வந்துவிடும்
புனிதர்களின் கனவுத்தேசம் இறுதியிலே தோன்றிவிடும்

கோயில்கள் எல்லாம் மாவீரர் சிலைகள் நிரம்பட்டும்
தாய்நிலத்தின் புதிதான தெய்வங்களாயவர்கள் ஆகட்டும்
பேயிலும் கொடியவரான துரோகிகள் உணரட்டும்
தாயகத்தை நெஞ்சில்வைத்து பூசிப்போரை அறியட்டும்
தாயின் வயிற்றில் கருத்தரித்த முதற்கொண்டே
மூச்சை தமிழாய் சுவாசித்த சிசுக்களவர்
தீயில் தீர்ந்தவரை மனதார வாழ்த்துரைத்து
எம் குலவிளக்குகலின் மரியாதையை தொடர்ந்திடுவோம்

ஜெயம்
23-11-2022