வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம் 1693
பேசாமல் பேசும் உலக மொழி!
மொழி தோன்று முன்னரே
மொழிந்த திந்த மொழி
வரியென ஒலியென வகுக்க முன்
வளமொடு வலம்வந்த வாழ்வு மொழி!
புலன்களைச் சேர்த்தெமைப்
புலமையாய்ப் படைத்த தாய்மை
புலம்பிட முடியாது அதைக் கேட்கவும்
இயலாது படைத்ததென்ன புதுமை!
விழி மொழி விரல் அசைவு மொழி
வித விதமாய் நாடுகளிடை இன்னும்
வழக்கமாய்ப் புழக்கமாய் இருக்க
வழியுண்டு நாமும் கற்றிட வகையுண்டு!
மூன்று நூறு தாண்டிய பல்வகை
திக்கெல்லாம் உண்டாம் இதன் தேவை
ஐ நாவும் ஆக்கிய சேவை ஈங்கே
அணைத்துச் செல்வோம் யாவரையும்!
எழுபது மில்லியன் தாண்டிய போதும்
எண்ணப் பகிர்வுக்கு வழிதரு மின்னல்
வளர்ந்த நாடுகளும் விதிவிலக்கு அல்ல
மொழி தெரிந்தோருக்கும் தேவை இங்கே!
கற்றது கைம்மண்ணளவு பாரீர்
நம் காதுகள் உதடுகள் மௌனிக்கும் போதும்
வித்தை காட்டும் விரலிடைப் புகும் மொழி
வலி மறக்க வழிகாட்ட விழி திறக்க வைக்கும் இனி!
சிவதர்சனி இராகவன்
22/9/2022