****நாகபூசணி நாமகீதம்****
நாற்றிசையும் கடலாடி களிக்குமே
நாகபூசணியைப் போற்றித் துதிக்குமே
காற்றிசையில் அலைமோதிக் கலக்குமே
காவியத்தாய் கழல் காணத் துடிக்குமே
நீலக்கடல் தாண்டும் நாகமது
நீந்தி நீந்தி கரை காணும்
கோலப்பூக் கொண்டு கோயில் புகும்
கோமகளைப் போற்றிக் குடை விரிக்கும்
ஓலமிட்டு ஓரம்வரும் சங்குகளும்
ஓங்கார ஒலியாகி ஓசை நல்கும்
சாலச் சிறந்த பெரும் சக்தி பீடம்
சந்நிதியை தொழுதாலே முத்தி கூடும்