சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

**** பழமை ****

அரிய உணவை அறிந்து அறிந்து
அன்னை தந்தார் அன்று
பரிவை காட்டி பாசம் காட்டி
பார்த்து வளர்த்தார் நன்று

பிரிவில் இன்று பேதை அம்மா
பேசா மடந்தை ஆகி
விரிசல் கொண்டு விலகி சென்று
வேசம் ஆனார் கொன்று

சொரியும் பூக்கள் போன்றே அன்புச்
சொந்தம் சேர்ந்து கொள்ள
பெரிய வாழ்வை பேறாய் பெற்றுப்
பெருமை கொண்டோம் அன்று

விரியும் உலகில் விந்தை பெருகி
விருந்தினரும் இன்றி
தெரியா முகமே ஆகிப் போனார்
தேசம் கடந்தே சென்று

உரிய நாட்டில் உண்மை வாழ்வில்
உள்ளம் இன்பம் காணும்
சரித்திரம் காணும் சத்தியம் வாழும்
சங்கடம் நீங்கும் அன்றோ

துரிதம் காணும் உலகில் தூய்மை
துலங்கவில்லை- மீண்டும்
அரிய பழமை வாழ்வை அறிந்து
அன்பாய் வாழ்வை அமைப்போம்