****இலைதுளிர்காலம் ****
மெல்லிய விடியலில் மேதினி ஒளிர்வில்
சில்லெனும் காற்றில் சிலிர்க்கும் தளிரிடை,
அல்லல் நீங்கிய அதிகாலைப் நடையிடை
சொல்லியம் காணாச் சுகங்கள் தந்ததே
மலையிடை தாண்டி மகிழ்வாய்த் தவழும்
சலசல அருவி சந்தம் சேர்த்திட
சிறகுகள் விரிக்கும் சின்னக் குருவிகள்
பறக்கும் பொழுதில் பண்ணிசை பாடின
உதயம் காணும் உதய சூரியன்
இதயம் ஏற்க இலங்கும் பொழுதிடை
நிறநிற பூக்கள் நிறைந்து கிளையிடை
நறைகளைத் தாங்கி நறுமணம் தந்தன
வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட வசந்தம்
எண்ணத்தில் கவி களை ஏற்றிடச் சொன்னன
மண்ணிடை மக்கள் மனதினில் இயற்கை
கண்ணினில் இன்பம் காட்சிகள் ஆகுதே