***** பணி ****
பூர்வீகம் பொதிந்த பொற்றமிழை – நாமும்
பார்மிசை பாடுதல் வேண்டும் அன்றோ
ஆர்வலர் அணைத்த அன்னையளை –நாமும்
சீர்பெருகச் செய்தல் வேண்டும் அன்றோ
நாவலர் நாடிய நற்றமிழை என்றும்
நாமும் காத்திடல் வேண்டுமன்றோ
பாவலர் பாடிய பைந்தமிழை என்றும்
பாரில் பரப்புதல் வேண்டும் அன்றோ
காவலர் காட்டிய காவியத்தை என்றும்
கண்போல் காத்திட வேண்டுமன்றோ
ஆவலில் அணைத்து அனைவருமே என்றும்
அல்லல் நீக்கிடல் வேண்டுமன்றோ
நாட்டிலே நம்மொழி இல்லை என்றால் என்ன
வீட்டிலே விதைகளை விதைத்திடுவோம்
பாட்டி என்றாகி பழங்கதைகள் சொல்லி
காட்டியே தமிழை கொடுத்திடுவோம்
அணிகள் திரண்டு அனுதினமும்
அடம்பன்கொடி என்றாகிடுவோம்
பணிகள் யாவும் பைந்தமிழிற் கென்று
பாரில் பறைகள் சாற்றிடுவோம்
திணித்திடல் வேண்டாமே தீந்தமிழை
தேனாய்ப் பருகிடச் செய்திடுவோம்
கணிக்கை செய்து கன்னித்தமிழை
காலமெலாம் போற்றிக் காத்திடுவோம்