அழகு!
வண்ணம் கொண்ட பூமியிலே
வாசல் தோறும் வனப்புகளாய்
எண்ணம் மயக்கி யிழுக்கிறதே
எதனைச் சொல்வேன் நானுனக்கே
கண்ணில் காணும் காட்சிகளைக்
கடந்து செல்ல முடியலையே
விண்ணும் காதல் கொண்டலைந்தே
வீசி நிற்குது சாமரமே!
புலரும் காலைக் கதிரொளியும்
புவன மெங்கும் பொற்கதிராய்
அலரும் பொய்கைத் தாமரையில்
ஆட்சி செய்யு மன்னங்களும்
நிலவினொளியும் நித்திலத்தில்
நீந்திக் களிக்கு மோடையென
உலவும் தென்றல் தெம்மாங்காய்
உள்ளம் கொள்ளை கொள்கிறதே!
தருவில் தூங்கும் காய்கனிகள்
தங்க மென்னும் நெற்கதிர்கள்
நெருங்கி வந்தே சிட்டுகளும்
நேசக் கீத மிசைக்கையிலே
அரும்பு மின்ப மென்சொல்வேன்
அகில மெங்கு மெழில்வனமாய்
விரும்பு மனைத்து மெடுத்திடென
விந்தை யழகாய்ப் பூமியதே!
கீத்தா பரமானந்தன் (203-205}
14-03-2022