காலத்தில் நிலைக்கும் அன்பு
******************************
காலங்கள் கடந்தும் காத்திருப்பு அன்புடனே
ஞாலத்தில் நாமிருவர் நட்புடன் காதலித்து
பாலம் அமைத்தோம் பலகாலக் கனவுடன்
கோலம் மாறினும் கோட்பாடு ஒன்றே
எந்தன் உயிராய் என்னுள் வந்தாயே
உந்தன் துணையாய் உயிரையும் தாண்டி
முந்திச் செல்லும் மூப்பையும் எதிர்கொண்டு
எந்நாளும் நினைப்புடன் என்வாழ்வு நகருதே
அன்பான வார்த்தைகள் அசராத நிசத்துடன்
துன்பமாய் ஊடல் துவண்டே போனது
என்பால் அன்றி எமதான காலத்தை
முன்சென்று வாழ்வதே முழுமைக் காதல்.