வியாழன் கவி 1578!
நம்பிக்கை வைத்திடு!
சுற்றும் கோள்களும் சுழலும்
சுமையெனத் தன்பணி மறவா
கத்தும் கடலலை எழுமே
காரணம் எதுவும் உரைக்கா!!
நிற்கும் தருக்களும் தருமே
நிழலெனத் தன்பணி யுரைத்தே
நிலவும் வான்மீதில் உலவும்
நிறைமதி என்றொரு நாளுக்காய்!!
எத்தனை எத்தனை அதிசயம்
எங்கு காணிலும் கண்ணில் படும்
ஆங்கோர் அதிசயம் நான் என்னும்
நாளும் வருமே நம்பிக்கையோடு!!
ஏற்றம் வரும் இறக்கம் வரும்
எண்ணங்கள் சிதறும் மறுப்பேது
ஏணிப்படிகளும் இறக்கக் குழியும்
ஒரு வழிப் பயணத்தில் சந்திக்கும்!!
வாழ்வெனும் மேடை வரலாறாகும்
வாழ்ந்தவர் தடங்களும் ஏடாகும்
நீர்த்துளி பெருகும் விரல் துடைத்து
வீரம் கொண்டெழு நம்பிக்கையோடு
சிவதர்சனி இராகவன்
10/2/2022