அபிராமி கவிதாசன்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253
தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
.....
பிள்ளைக் கனியமுது - அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு - அதில்
விளையும் உருபுதிது!
பிஞ்சுக் கைஅசைவு - அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு - பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!
தவழுவும் கலைநிலவு - பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு - பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!
அரும்பின் இதழ்பொலிவு - பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் - அதைச்
சுற்றி வரமகிழும்!
பிள்ளைக் கனியமுது - அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை - அது
தொலைக்கும் நம்கவலை!
அபிராமி கவிதாசன்
13.02.2024
