வியாழன் கவிதை

வேடம்

அனுராதா சௌரிராஜன்

ஒட்டும் பசையற்று
பொட்டுகள் உதிர்கின்றன!

ஓசைதரும் கொலுசுமணிகள்
உதிர்ந்து ஒலி இழக்கின்றன!

சீப்பில் இப்பொழுது
சின்ன வெள்ளிக் கம்பிகள்!

காலணிகள் தடிமன்
தேய்ந்து குறைந்து விட்டன!

சமைத்த உணவை இன்னும்
சலிக்காது விமர்சிக்கும்!

உருமாறிய நியாய ஆசைகள்
உள்ளத்துள் ஒடுங்கி விட்டன!

உழைப்பின் உருவகங்களாய்
உயரத்தில் பிள்ளைகள்!

சேர்த்தவரையும் சேர்த்து
சேர்ந்திருக்கும் பிள்ளை சிறப்பு!

ஓடியாடி வேலை செய்து
உழைத்திருக்கும் தலைமை!

ஓய்வு பெற்ற பின் தான்
உணரும் தன்னவள் அருமை!

புரியாமல் பிரிந்திருக்கும் சில
பிரிந்த பின் புரிந்து கொள்ளும்!

தேய்ந்ததும் காய்ந்ததும்-உயிர்
ஓய்ந்த பின் உணரப்படும்!

பரிமாறிய பரிணாமங்கள்
பரிதாப தியாக பரிமாணங்கள்!

வாழ்க்கை நாடகத்தில்
வஞ்சியர் வேடம் வலியதே!