வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மனச்சாட்சி…..
வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும்
வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய்
ஆர்பரித்து மடிந்தாலும்
அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது
ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது
வேற்றுச் செயல்களை வெட்டிப்புதைப்பது
வேர்கொண்ட சாட்சிக்கூடு விலத்தாத ஆட்சிக்கூடு
தான் கொண்ட நேர்மையை தர்கித்து தரிசிக்கும்
தன்னியல்பின் பயணத்தை நேர்மையில் நிலைப்பிக்கும்
உண்மையின் முதலாளி உராய்கின்ற தொழிலாளி
அகத்தின் நீதிபதி ஆழஉழும் மனச்சாட்சி
புகுந்த பூத்திட்ட அகத்தை புடமிடும்
நின்று நிதானித்து நிஜத்தை நிலைப்பிக்கும்
உள்ளகத்தில் உறங்காது உண்மையை மறைக்காது
நேர்மையைப் போதிக்கும் நித்திய தரிசனம்
காயத்தின் கருங்குழி காப்பகத்தின் வெகுமதி
தார்ப்பரியம் கொண்டது தனித்துவத்தை உரைப்பது
சுட்டிட சுட்டிட வெண்மையுறும் சங்குபோல்
பட்டிட பட்டிட பக்குவத்தை பறைசாற்றும்
மனச்சாட்சி மன்றிலே மனுநீதி அகத்திலே!
நன்றி.