வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

இனியென்ன இளவேனில்…

விழுமியங்கள் தாங்கிய விளைநிலத்தின் விருட்சங்கள்
அழுகின்ற அவலத்தில் அத்திவாரப் பலமிழந்தோம்
அங்கங்கள் துண்டாட அவயவங்கள் செயலிழக்க
குமுறும் மனக்கொதிப்பில் கொந்தளிக்கும் அலையானோம்

எழுகைக்கு உதவியில்லை ஏற்றத்திற்கு வழியுமில்லை
அழுகையின் குரல்களோ அடங்கிய நிலையுமில்லை
பாதியிலே பட்ட ரணம் பாதிப்பில் தமிழர் இனம்
முள்ளிவாய்க்காலில் முற்றாகத் தகர்ந்தோமே

முழுநிலவு வாழ்வியலோ முழுதாக இருண்டது
ரணமானோம் வாழ்விலே பிணமானோம் பிடிப்பிலே
ஆறாத ரணங்களே அகத்திற்குள் ஏராளம்
விழுப்புண்ணின் உணர்வோடு விம்முகின்ற உறவுகளை

வதைபட்ட காயத்துடன் வரட்சி கொள்ளும் இனத்தவரை
கலங்கரை விளக்காகி கரம்பற்றல் ஒளியாகும்
ஆறுதல்த் துடுப்பாகி கரைசேர்த்தல் வழியாகும்
போரின் வலிகள்தான் புறந்தள்ளி ஒய்ந்ததென

புலத்தில் வாழும் நாம் விலத்திடல் வேண்டாமே
புதுயுகத்தின் யாத்திரைக்கு புத்தூக்கம் நாமாவோம்
மறுபதிப்பின் வாழ்வியலை அரங்கேற்ற அச்சவோம்.
மனிதத்தின் நேயமே மாற்றீட்டுக் காப்புறுதி
உள்ளத்தின் குமுறலுக்கு
உதவுதலே ஒற்றைவழி!.

நன்றி மிக்க நன்றி.