“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள்
கலகலவென விழித்து விட்டாள்
மழை வெயில் குளிரென
மத்தாப்பைத் தாங்கி நின்று
முத்தாப்பாய் வந்து விட்டாள் !
காலநிலையும் எழிலூட்ட
காற்றலைகள் மோதிவர
கார்காலம் மழை பொழிய
கணகணப்பும் கூடிவர
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் !
மழைச் சாரல் அடித்துவிட
மரக்கிளைகள் இலை உதிர்க்க
மஞ்சள் வர்ண இலைகளும் தான்
மண்ணினை அலங்கரிக்க
மலரினமும் மயங்கிவிழ
மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் !
கார்த்திகை மைந்தர்களை
கல்லறைக் காவியரைத் துயிலெழுப்ப
காந்தள் கொண்டு வந்துவிட்டாள்
காரிகையாம் கார்த்திகையாள்
கனதியான நினைவுகளும் காட்சியாகுதே !