வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ என்று தீரும்…….கவி…ரஜனி அன்ரன்….( B.A ) 24.08.2023

தேடும் உறவுகளின் தீராத தேடல்
தீர்வில்லா வினாவாக தீர்க்கமில்லா முடிவாக
ஆண்டுகள் பலவாக ஆறாத வடுவாக
ஆற்றொணாத் துயராக மாற்றமின்றி நகருது
என்று தீரும் இந்த உறவுகளின் தேடல்
என்று தீரும் இந்த உறவுகளின் ஓலம்
தேடும் உறவுகளைத் தேடித் தேடியே
வாடி வதங்கி விட்டனரே உறவுகளும் !

அவலங்கள் ஓலங்கள் அன்றாட நிகழ்வாச்சு
விழிநீரும் வழிய வலிகளும் வந்தாச்சு
தொண்டைத் தண்ணீரும் வற்றியே போயாச்சு
காணாமற் போனோர் கதையும் கானலாச்சு
என்று தான் தீருமென ஏக்கத்தோடு
நம்பிக்கை வேர்களைப் பிடித்தபடி
நகர்த்துகின்றார் வாழ்வினை உறவுகளும் !

விடை காணா விடையோடு
தீர்வில்லாத் தேடலோடு
தடைகளைத் தாண்டியும்
விம்மலோடும் விசும்பலோடும்
வருவார்கள் எனும் நம்பிக்கையோடு
தொடர்கிறதே காத்திருப்பும்
என்று தீரும் இந்த உறவுகளின் தேடல்
எதிர்பார்ப்போடு நானும் !