“ சிறுகதையின் முன்னோடி “…கவி..ரஜனி அன்ரன் (B.A) 13.10.2022
ஈழத்துக் கலைஞன் சிறுகதை மன்னன்
இலங்கையர்கோன் எனும் சிவஞானசுந்தரம் ஐயா
ஈழத்தில் ஏழாலையில் பிறந்து
நாடகத் துறையோடு விமர்சனத் துறையிலும்
நாட்டம் கொண்டு சிறுகதையின் முன்னோடியாகி
தமிழோடு இலத்தீனும் ஆங்கிலமும் பயின்று
தமிழுக்கு ஆக்கினாரே சிறுகதைத் தொகுப்புக்களை !
சட்டம் பயின்று சட்டத்தரணியாகி
நிர்வாக சேவையிலும் அதிகாரியாகி
வரலாற்று நிகழ்வுகளை சிறுகதைகளாக்கி
ஆங்கிலக் கதைகளையும் மொழிபெயர்த்து
ஆக்கினார் பற்பல சிறுகதைத் தொகுப்புக்களை
பட்டை தீட்டிய வைரமாக ஒளிர்ந்து
உயர்தர பாடத்திட்டத்திலும் வந்து
அடையாளத்தைக் கொடுத்தது வெள்ளிப்பாதசரம் !
உரையாடல்களை உன்னதமாக்கி
யாழ்ப்பாணத்தைக் கதைக்களமாக்கி
வாழ்க்கையை மனிதஉறவுகளைக் கருவாக்கி
உருவாக்கினாரே சிறுகதைத் தொகுப்புக்களை
நாற்பதுகளில் சிறுகதைகளின் முன்னோடியாகி
நாற்பத்தியாறாம் வயதில் அக்டோபர் பதினான்கில்
இவ்வுலகை விட்டு ஏகினாரே சடுதியாக !