வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ உயிரின் மூச்சு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16,06,2022

காற்றில்லா இடம் வெற்றிடம்
காற்றில்லா விட்டால் உயிர்கள் ஜடம்
உயிரின் மூச்சு காற்று
உயிரோடு உயிர்ப்போடு நாம் வாழ
உரமோடு வரமானது காற்று
மரம் தரும் வரமே காற்று
காற்றிற்கு ஒரு தினத்தை ஜூன் பதினைந்தில்
காத்திரமாய் தந்ததுவே உலக காற்றலை ஆணையம் !

வேகத்தைப் பொறுத்து காற்றும்
வெவ்வேறு வடிவம் கொள்ளும்
பல்வேறு பெயரையும் பெறுமே
தென்றலாய் வருடி கொண்டலாய் கிழம்பி
வாடையாய் வீசி கோடையாய் வந்து
சூறைக்காற்றாகிச் சுழன்று சூறாவளியாகியும்
அள்ளிச் சென்றிடுமே அனைத்தையும் !

புவி மண்டலத்தின் அழுத்தத்தில்
வாயுக்கள் உருவாக
அதுவே காற்றாகி எம் மூச்சாகி
வானிலை மாற்றத்திற்கு வானலை ஒலிபரப்பிற்கு
காற்றலை மின்சாரத்திற்கு காசினியின் குளிர்ச்சிக்கு
வாழ்வின் உயிர் ஆதாரத்திற்கு வலுவாகிறதே காற்று
வரமான காற்று உரமாகிறது எம் வாழ்விற்கு !