என் விரல்அளைந்த மணல்
என் உடல் தழுவிய நீரின் பெருந்துளிகள்
கால்கள் பதித்தெழுந்த சுவட்டின் தொடுகை
கட்டி அணைத்த உறவுகளின் ஸ்பரிசம்
எத்தனை அழகான உலகமது அன்று
பின்னி இழைந்த பெரும் உயிரின் இசைவு
தோற்றால் தோள் கொடுத்த நட்பு வட்டம்
அத்தனையும் தொலைத்து எத்தனை நாளாயிற்று
வட்டங்களும் பரிவட்டங்களும் முக மூடிகளும்
பேராசைகளும் பெரும்பணத்தின் முதலைகளுமாய்
வீட்டின் ஒவ்வோர் மூலைகளுமே இன்று
சிலந்திப்பின்னலிட்ட தீர்க்க முடியாத சிதைவில்
ஒப்பனைகள் என்னவோ பேரழகு அகத்தில்
அன்பை பண்பை நிம்மதியை உறவை
புதைத்து அழுக்கு மூட்டைகளால் அலங்கரித்த
உப்பரிகை தேவதைகள் பவனியில் இங்கு
மௌனித்துப் போகிறேன் எத்தனை அழகான உலகமது
அவலட்சணங்களின் ஊர்வலத்தில் அங்கலாய்க்கின்ற
புலம்பெயர் தேசத்து புண்ணிய ஆத்துமாக்கள்