உயிர் கொடை
பொத்தென மிரட்டிப் பூட்டினர் வாயை
புத்தகக் கூடாரத்துக்கும்
வைத்தனர் தீயை
சொத்தாம் புத்தகங்களும்
கண்டன சாவை
நித்தமும் சூழ்ந்து
நிலைகுலைய வைத்தது
சுத்தம் விட்டவரின்
பேரினவாத உபாதை
கடையாரின் சேட்டை
கனதியான வேட்டை
காட்டினேன் அதிலே காணவே சிலதை
காட்டினால் முழுதைக்
காலனும் அஞ்சுவான்
இன்னல் அறுத்து
இறைமை காக்க
தன்னலம் அறுத்த
தலைவன் தம்பி
சொன்ன படியே
சொன்ன வழியே
மின்னலெனப் புகுந்து
மிரளவைத்தார் களத்தை
சன்னங்களால் சரிந்து
சரித்திரமானார் நிலத்தில்
சின்னமாய் மிளிர்கின்றார்
துயிலுமில்லத் தளத்தில்
வீணாய் வாழ்வை விம்மிக் கழிக்காமல்
நானாநீயா என்பதில்
குறியாய் நின்றார்
தானே தாமாய்
தம்முயிரை ஈய்ந்தார்
உயிர்கொடையே உயர்ந்த கொடை
உவந்தளித்தார்க்கு என்றுமில்லைப் புகழ்த்தடை
உயிர்கொடையாளர் இவர்க்குக் கொடுக்கோம் நாம்விடை
என்நாளும் இருப்பரெம் இதயச்சுடரில்
இனிவருமா முடை தடை
மனோகரி ஜெகதீஸ்வரன்.