சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாற்றம்

மாறுபடும் நிலையே மாற்றம்
ஊறுதரும் சிலமாற்றம்
உய்வுதரும் பலமாற்றம்

சாதக மாற்றம் தரும் ஏற்றம்
பாதக மாற்றம் தரும்
ஏமாற்றம்

முன்னைய மாற்றத்தாலே
அதுதந்த ஏமாற்றத்தாலே
இன்னமும்
நடக்கின்றோம்
உபத்திரவச் சாலையில்
ஊனவுணர்வுகளோடு
உடற்கூடு காவி

எச்சங்களைப் பேணும்
எங்களது ஆசை
உச்சத்தில் இருப்பதாலேயே
ஊமைகளாய் கடக்கின்றோம்
அச்சத்தை மறைக்கவே
ஒப்புக்காய் சிரிக்கின்றோம்
கொச்சைப் பேச்சுக்களைக்
கொசுவத்தில் கொழுவாது
இச்சை யடக்கி
இதயத்தை இறுக்கின்றோம்
பிச்சைகளை ஏற்றும்
பிஞ்சுகளைக் காக்கின்றோம்

கூச்சலிட்டு என்ன பயன்?
கும்மிருட்டு அகலவா போகிறது
ஆச்சரியம் நிகழின்
அனைத்தும் மாறும்
பாதகம் கழுவேறும்
சாதகம் அரங்கேறும்

முப்பொழுதும் வேண்டித் துதிக்கின்றேன்
எப்போது வருமது சொல்லுங்கள்
அப்போதே பூச்சொரியும் என்பாக்கள்
தப்பேதும் சொல்லாதீர்கள்
அதுவரை மௌனமே எனதுமொழி

மனோகரி ஜெகதீஸ்வரன்.