சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

பருவ ஏட்டின் இறுதிப் பக்கம்
தருமது பலவிதத் தாக்கம்
இருமதைச் சொல்கின்றேன் இயன்றவரை

முதுகெலும்பு வளைந்து போகும்
மூன்றாங்கால் முளைத்து தாங்கும்

ஒடுங்கியுடல் ஓர்மம் இழக்கும்
நடுநடுங்கிப் பல்லும் நழுவும்
சுடுசொல்லை நாவும் வீசும்
விடுகதைகள் பலவும் பேசும்

இரைசப்பு ஏக்கம் கூடும்
புரையேறிப் போக்கும் காட்டும்
நரையப்பி நளினம் தீட்டும்
திரைபோட்டுப் பார்வை மிரட்டும்

நடைதளர்ந்து நாட்டியம் ஆடும்
உடைகழன்று அம்மணம் போர்க்கும்
விடைமறந்து மனமும் சோரும்
படையெடுத்து நினைவு வாட்டும்

இறையன்பில் நாட்டம் கூடும்
மறையோது கூட்டம் சேரும்
விறைப்பாயே மனமும் ஆகும்
குறைதுப்பி உறவும் போகும்

இதுவாயே வந்த பருவம்
முதுமை என்பது அமுதம்
அதுதரும் அனுபவப் பாடம்
இதுவேர் இளையோர் கல்விக்கூடம்

பழுத்தல் வழமை தானே
அழுவது மேனோ முதுமை
இழுக்கென எண்ணல் ஏனோ
பழுவினைச் சுமத்துதல் சரியோ
அழுக்கென வெறுத்தல் முறையோ
தழுவுதல் தருமோ பாவம்
விழுதுகள் உணரா விந்தை
பழுதுகள் தானே பரவுது இங்கே

மனோகரி ஜெகதீஸ்வரன்