சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

அத்திவாரம்

கட்டத்தைத் தாங்கி நிற்பது அத்திவாரம்
கட்டுமானப் பணிக்கும் அதுவே ஆதாரம்
அதனது கட்டுக்கெட்டால் கட்டடம் காணும் சேதாரம்

அழகான கட்டடம்
அமைத்தென்ன இலாபம்
அத்திவார உறுதிவிட்டு
பாழாகுமே கட்டடம் நீளாயுள் கெட்டு
நிலத்தை தொட்டு

வெள்ளம் மழை
சூறாவளி சுனாமி
அள்ளிக்கொண்டும் போகும்
ஆட்களுடன் கட்டத்தை
தள்ளிச் சரித்தும்
சங்காரம் நிகழ்த்தும்

அத்திவார உறுதியே
கட்டட ஆயுளைக் கூட்டும்
பத்திர உணர்வைப்
பயமுறுத்தாது தீட்டும்

தோண்டுவார் அத்திவாரப் பள்ளம்
தோதான நாளில் நிலத்தில்
வேண்டியே இறையை முறையாய்
முனைப்புடன் வைப்பார் முதற்கல்லை
இதனையே அழைப்பர் அடிக்கல்லென

செயலில் நிறைவு காண
உரியவர் வைப்பார் முதற்கல்
செம்மை யணிந்து நிமிர்ந்து
கட்டமும் தோன்றும் கண்முன்னே

செய்தியில் செருகுண்டு
சேகரிக்க
அமைச்சரும் வைப்பார் அடிக்கல்
சொட்டும் வளராக் கட்டடம்
சோகத்தையே துப்பும் அதன்பின்னே

மனோகரி ஜெகதீஸ்வரன்.