தீப ஒளியே
விழி விரும்பும் தோழி நீயே
விலகா வீரிய உறவும் நீயே
விருந்து இடுவதும் உந்தன் ஒளிக்கதிரே
கண்ணைப் பறிக்காத் தீப ஒளியே நீ
அழியும் உன்னால் அண்டும் இருள்
அதன்பின் கண்ணுக்குத் தெரியும் பொருள்
குழிமேடும் காணும்
உன்னால் ஒளி
கூட்டி வருவாய் கூட்டத்தை அதன்வழி
காட்டித் தருமதுவும் கயவர் வெறி
வழிந்து ஓடும் நீருமெம் விழிவழி
மங்களம் அமங்கலம் இரண்டுமுன் தளம்
குங்குமப் பெண்களுக்கு
நீயோர் கும்பிடுகலம்
அந்திசந்தி ஆலயமெங்கும் சிந்துமொளி உன்ணொளியே
ஆண்டவனைக் காட்டுவதும் உன்ணொளியே
பண்டிகைக் காலமும் மிளிரும் உன்னால்
பின்னிக் கதைகளும்
சுழலும் பின்னால்
ஆபத்து இல்லாமலே ஒளிதந்து
தீப ஒளியே திசையெங்கும் சிந்து
துயரக் கீற்றிணையும் வீசுவாய்
அயர்வகல சுகவருடலையும் பூசுவாய்
பயமகற்றவும் பரவி நிற்பாய்
பழிசுமக்கவும் தொற்றிப் பரவுவாய்
மனோகரி ஜெகதீஸ்வரன்